நீண்டகாலக் கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்! ரஞ்சித் பண்டார கூறுகிறார்
அரச சேவை தொடர்பில் நாட்டு மக்கள் மாறுபட்ட கருத்துக்களைக் குறிப்பிடுகிறார்கள். எதிர்காலத்துக்குப் பொருந்தும் வகையில் அரச சேவை நிச்சயம் மறுசீரமைக்கப்படும். காலம் காலமாக காணப்படும் குறைபாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அரச சேவையின் செயற்பாடு தொடர்பில் நாட்டு மக்கள் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். எதிர்காலத்துக்கு பொருந்தும் வகையில் அரச சேவை நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும். காலம் காலமாகக் காணப்படும் குறைபாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது.
அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் நாள்களில் பல அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும். அரச நிறுவனங்களை முழுமையாக தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.
ஒருசில அரச நிறுவனங்களின் மந்தகரமான செயற்பாடுகளால் முழு அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. தொழிற்சங்க நடவடிக்கை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரச சேவையாளர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தை எதிர்த்துள்ளார்கள். ஆகவே 224 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும்.
ஊழல் மோசடி தொடர்பில் பிரதான பிரசாரங்களை முன்னனெடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.அடிப்படை கட்டமைப்புக்களில் மாற்றம் ஏற்படுத்தால் அரச கட்டமைப்பு சிறந்ததாகத் தொழிற்படும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை