சாரா ஜெஸ்மின் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளமை உண்மைகளை முற்றாக மறைப்பதற்கான சதித் திட்டம்! முஜிபுர் ரஹ்மான் சாடல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியாகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டுள்ளமை உண்மைகளை முற்றாக மறைப்பதற்கான சதித்திட்டமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சதித்திட்டங்களுக்கு இடமளிக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைப் பிரிவின் ஊடாகவேனும் உண்மைகளை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியாவார் என்றும், எனவே அவர் தேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டது.
சாரா ஜெஸ்மின் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்பதைக் கண்டறிவதற்காக 3 மரபணு பரிசோதனைகளை செய்ய வேண்டுமென தீர்மானித்தது யார்? இதற்கு முன்னர் செய்யப்பட்ட இரு மரபணு பரிசோதனைகளும் தவறு எனத் தீர்மானித்தது யார்? நீதிமன்றமா அல்லது பொலிஸ்மா அதிபரா?
இவ்வாறு ஒவ்வொரு விசாரணைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், நீதிமன்றத்தில் இருப்பில் உள்ள அனைத்துக்கும் அவ்வாறே மேற்கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை இனங்கண்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதே கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்பட்டது.
இந்நிலையிலேயே தற்போது பிரதான சாட்சியாகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்துவிட்டார் எனக் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார் எனக் கூறப்படும் சஹ்ரானின் குடும்ப அங்கத்தவர்கள் உட்பட 16 பேரின் பெயர்ப்பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எந்தவொரு சடலமும் அடையாளம் காணப்படாமல் இருக்கவில்லை. 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுத்தாக்குதலில் இனங்காணப்படாத சடலங்கள் எவையும் காணப்படவில்லை என்ற வகையிலேயே காரணிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், திடீரென எவ்வாறு சாராவின் சடலம் அங்கு தோன்றியது?
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 2 மரபணு பரிசோதனைகளிலும் சாரா அங்கு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், மூன்றாவது பரிசோதனையில் அவர் அங்கு இருந்ததார் எனக் கூறப்படுகிறது. அவ்வாறெனில், யாருடைய அழுத்தத்தின் பேரில் மூன்றாவது மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது?
தாக்குதல்களின் பின்னர் சாராவின் குரலைக் கேட்டதாக சஹ்ரானின் மனைவி சாட்சியமளித்துள்ளார் என ஜனாதிபதி விசாரணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், தனது மகள் விபத்தொன்றுக்குள்ளானதாக சாராவின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், சாரா தப்பிச் செல்ல உதவியதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியொருவர் கடந்த இரு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எவ்வாறு திடீரென அவர் இறந்துவிட்டார் எனக் கூற முடியும்?
உண்மைகளை மறைப்பதற்காக ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சியே இதுவாகும். சாரா ஜெஸ்மின் உயிரிழந்தார் எனக் குறிப்பிட்டு இதனை நிறைவு செய்யத் திட்டமிடுகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச விசாரணை பிரிவினரின் ஒத்துழைப்பைப் பெற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை