போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்கத் தயார்! நீதி இராஜாங்க அமைச்சர்

 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நாடு என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையாயின், புனர்வாழ்வளிக்கத் தயாராக உள்ளோம் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவை வருமாறு –

பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண்போம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களும் தற்போது உண்மையை விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை விமர்சிக்கும் எதிர்தரப்பினர் பொருளாதார மீட்சிக்கான மாற்றுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

எரிபொருள் கட்டமைப்பின் போட்டித்தன்மை வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்காகவே எரிபொருள் விநியோக கட்டமைப்புக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு அடிபணியப் போவதில்லை.

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு பின்வாங்கப் போவதில்லை.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த மாற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்தின் ஊடாக முன்னெடுத்துள்ளோம். பொருளாதார முன்னேற்றத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.