பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும் – விமல் வீரவன்ச

இலங்கை மத்திய வங்கி நாடாளுமன்றத்திற்கும், அரசாங்கத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டும். சர்வதேசத்தின் நோக்கத்துக்கு அமையவே உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

எதுல் கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,இருப்பினும் நடைமுறையில் அது சாத்தியமற்றதாக உள்ளது. நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டுமா? இல்லையா என்பதை நிறைவேற்றுத்துறை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது.

நிதி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கி நாடாளுமன்றத்துக்கும், அரசாங்கத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மத்திய வங்கி முழுமையாக சுயாதீனமாக செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் நேர்ந்ததை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மத்திய வங்கி அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் பொறுப்புக் கூற வேண்டும் என்ற நிலை காணப்பட்ட போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றது. அனைத்து பொறுப்பு கூறலில் இருந்து மத்திய வங்கியை விடுவித்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

சர்வதேசத்தின் நோக்கத்துக்கு அமையவே உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளோம். சிறந்த தீர்மானத்தை நீதிமன்றம் அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.