பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல – பந்துல
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை.
எனினும் நாட்டின் நன்மையைக் கருத்திற் கொண்டு அவ்வாறானதொரு எதிர்பார்ப்பைக் கொண்டிருத்தல் தவறல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதாக வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் –
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் கட்சி ரீதியில் உத்தியோகபூர்வமான யோசனைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
ஆனால் பொதுஜன பெரமுனவும் , நாட்டை நேசிக்கும் ஏனைய அனைத்து தரப்பினரும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கே முக்கியத்துவமளித்துள்ளனர்.
அதனை நேர்மையாகவும் , சரியாகவும் செய்யக் கூடிய பலம் மிக்க தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல நாடாளுமன்ற உறுப்பினர்களதும் நன் மதிப்பைப் பெற்றுள்ளார். எமது நாடு காணப்பட்ட இடத்திலிருந்து சிறந்தவொரு இடத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் சாதகமான முறையில் இடம்பெற்றுள்ளன.
கேள்வி : அவ்வாறெனில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்க முடியுமா?
பதில் : நாட்டுக்கு நன்மை ஏற்படும் எனில் , சிறந்த எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருத்தல் தவறல்ல என்பதே எனது நிலைப்பாடாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை