இடைக்கால ஜனாதிபதி தெரிவு வாக்குச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டன – சபாநாயகர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் அழிக்கப்பட்டுள்ளன என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிவிப்புக்களை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு குறப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அரசமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் அத்தியாயம், நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 7 பிரிவின் விதிவிதானங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யும் 1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட விதிவிதானங்களை பின்பற்றி 2022.07.20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்புக்கான அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் மற்றும் 2023.03.24 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தெரிவு குழுவின் அனுமதிக்கு அமைய நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் அழிக்கப்பட்டன. – என்றார்.
2022, ஜுலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி விலகல் கடிதத்தை வெளிநாட்டில் இருந்தவாறு ஜுலை மாதம் 14 ஆம் திகதி சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்கத்தின் சிறப்பு ஏற்பாடுகளுக்கு அமைய நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணிகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராக இருந்து முன்னெடுத்தார்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கு ஆளும் தரப்பின் வேட்பாளராக பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக டலஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்கள்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவு சிறப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பு 2022.07.20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 223 வாக்குகள் அளிக்கப்பட்டன அவற்றில் 219 வாக்குகள் செல்லுபடியானவை, 4 வாக்குகள் செல்லுபடியற்றவை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்தார்.
இரகசிய வாக்கெடுப்பில் ஆளும் தரப்பின் வேட்பாளரான பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.இதற்கமைய நாட்டின் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் அளிக்கப்பட்ட இரகசிய வாக்குச்சீட்டுக்கள் இடைக்கால ஜனாதிபதி தெரிவு சிறப்பு சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் அழிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை