ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைதுசெய்வோம் – திலும் அமுனுகம
கம்பஹா மாவட்டத்தில் ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகவும் பயங்கரமானது. அதனால் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை விரைவில் கைதுசெய்து சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கம்பஹா மாவட்டத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவரும் ஓமான் நாட்டுக்குச் சொந்தமான ஆடைத்தொழிற்சாலை முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்பு. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கையில் எமக்கு திருப்தியடைய முடியாது. அதனால் இந்த சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கி இருக்கிறோம்.
அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஓமான் தூதரகமும் தங்களது வன்மையான கவலையை தெரிவித்திருக்கிறது. இது எமக்கு பாரியதொரு பாதிப்பாகும். அதனால் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்றவகையில் நான் தலையிடுவேன். ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்ற உறுதியை இந்த சபைக்கு தெரிவிக்கிறேன் என்றார்.
கருத்துக்களேதுமில்லை