உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலம் : ஒரு சில ஏற்பாடுகள் பாராளுமன்ற குழு நிலையில் திருத்தப்படும் – பொதுஜன பெரமுன
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூல வரைவின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையின் போது திருத்தம் செய்யப்படும்.
மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் எவரும் அரசியல் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பெரமுன காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூலம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமாயின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூல வரைவில் ஜனநாயக கொள்கைக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் அவை நாடாளுமன்ற குழு நிலையில் திருத்தம் செய்யப்படும்.நாட்டு மக்களின் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி எவரும் அரசியல் செய்ய முடியாது.
மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது, ஒருவேளை அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டால் அதன் பெறுபேறு அரசாங்கத்துக்கு எதிராக அமையும்.
ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என ‘உரிமை’ தொடர்பில் வரைவிலக்கணம் வழங்கப்படுகிறது.
தொழிற்சங்கத்தினர் தங்களின் தொழில் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளுக்கும் தடையாகச் செயற்படுகிறார்கள். ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
தொழிற்சங்கத்தினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்துள்ளன.
இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், மனித உரிமைகள் அமைப்பினர் இதனை ஏன் மனித உரிமை மீறல் செயற்பாடாகக் கருதவில்லை.
ஜனநாயகத்துக்கு முன்னுரிமை வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாதத் தடைசட்டங்கள் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படுகிறது.
நாட்டின் சட்ட ஒழுங்குக்கு அமைய அனைவரும் ஒழுக்கமாக செயற்பட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை