புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை – காவிந்த
எதிர்க்கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்களால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசாங்கம் சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர , அதனை நிறைவேற்றும் முயற்சிகளைக் கைவிடவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்துக்குப் பல்வேறு தரப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமையால் அரசாங்கம் அதனை சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர , அதனை நிறைவேற்றும் முயற்சியைக் கைவிடவில்லை.
அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் , தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்வதே இதன் நோக்கமாகும். இதன் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகளாகவே அடையாளப்படுத்தப்படுவர்.
உண்மையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதெனில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
மாறாக, நாட்டை வங்குரோத்து நிலைமைக்குக் கொண்டு சென்ற அஜித் நிவாட் கப்ரால் போன்றவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக , அவர்களுக்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்று ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிரான சதியாக சித்திரிக்கப்படுகின்றன. மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான காரணமும் அரசாங்கமே.
எவ்வாறிருப்பினும் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்கும் மாற்று அரசாங்கமாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்து நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அந்த பொறுப்புக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாம் தயாராக இருந்த போதிலும் , அரசாங்கம் அதனை முறியடித்துள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை