பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால் மேன்முறையீடு செய்வோம் – மைத்திரி
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால், அதற்கான திருத்தங்களை மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கொழும்பில் உள்ள சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர் –
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் இம்முறை கண்டி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. பாரியளவிலான ஆதரவாளர்களை இந்தக் கூட்டத்தில் பங்குபற்றச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவால் தீர்க்கப்படவேண்டிய விடயமாகும். எம்மால் எதனையும் செய்ய முடியாது.
அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோம்.
குறித்த சட்டமூலத்தில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால், அது தொடர்பாக திருத்தங்களை மேன்முறையீடு செய்வோம்.
மேற்படி சட்டமூலத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராயாமல், அதனை முழுமையாக எதிர்ப்பதா, இல்லையா என்பதைக் கூற முடியாது.
சுதந்திர கட்சியின் சட்டத்தரணிகள் குழாமிடமிருந்து இது தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை