எமது கொள்கைக்கு இணக்கமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் – பொதுஜன பெரமுன

கட்சி மட்டத்தில் சகல தரப்பினருடன் கலந்தாலோசித்து எமது கொள்கைக்கு இணக்கமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித பேச்சுகளும் உத்தியோகபூர்வமாக இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என ஆளும் தரப்பின் ஒருசிலர் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதனை கட்சியின் நிலைப்பாடாகக் கருத முடியாது. பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் சகல தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி மட்டத்தில் விரிவான பேச்சில் ஈடுபட்டு எமது கொள்கைக்கு இணக்கமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவின் போது அவதானத்துடன் செயற்படுவோம்.

பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் தொடர்பில் ஒருதரப்பினர் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம், விடுதலை புலிகளின் 30 வருடகால யுத்தம், முஸ்லிம் அடிப்படைவாதம் என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டுள்ளது.

ஜனநாயகப் போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் முறையற்ற கோரிக்கைகளுக்கு அடிபணிந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.