ஜப்பானில் பரிதாபகரமாக பலியான இலங்கை மாணவி!
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) விளக்கமளித்துள்ளது.
ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைட்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையரான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி (வயது 33) ஒரு மாணவியாக 2017இல் ஜப்பானுக்கு சென்றார்.
இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி உயிரிழந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் விஷ்மா சந்தமாலி தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாதுகாப்பு கமெராவில் பதிவான 5 மணிநேர காட்சிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.
அந்த காட்சிகள் 7 நிமிட காணொளியாக சுருக்கி, டோக்கியோவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக காட்டப்பட்டுள்ளது.
விஷ்மா இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஒரு பகுதி, அவர் கட்டிலில் படுத்து இருப்பதையும், தன்னால் அசையவோ சாப்பிடவோ முடியவில்லை என்று கூறிய பிறகு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி அவர் அதிகாரிகளிடம் கெஞ்சுவதையும் காட்டுகிறது.
அவள் இறந்த நாளின் மற்றொரு காட்சியில், ஓர் அதிகாரி விஷ்மாவின் விரல் நுனியில் குளிர்ச்சியாக இருப்பதாக இண்டர்கொம் மூலம் அறிவித்த பிறகு, பதிலளிக்காத விஷ்மாவை எழுப்ப முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்ட காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டவை எனவும் அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன எனவும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை