ஐ.எம்.எப்பிடம் இருந்து கடனுதவி பெறும் அரசு: வீழ்ச்சியுறும் கல்வி தொடர்பில் கவனம் இல்லை!  யோசெப் ஸ்டாலின் வருத்தம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் பல வருடங்களாக வீழ்ச்சியடைந்து வரும் கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை எனவும் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்யாமையால் பாடசாலை அமைப்பில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளவை வருமாறு –

‘2023 ஆம் ஆண்டு முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 4ஆம் திகதி வழங்கப்பட்டு 17ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும், மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் பணிகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை

இந்த ஆண்டு தேவையான அளவு பாடப்புத்தகங்கள் அச்சிடப்படவில்லை, பயன்படுத்திய பாடப்புத்தகங்கள் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சீருடைக்குத் தேவையான துணியில் 75 சதவீதம் சீன அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதோடு சீருடைக்கான முழுத் தேவையும் இதன் ஊடாக பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன், மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்ற போதிலும் பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உணவுத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் போஷாக்கு உணவுத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாதமை ஏற்கனவே கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது.

கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆசிரியர் அதிபர் சங்கத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கல்வி அமைச்சரிடம் இந்ம விடயங்களை வலியுறுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், ஏப்ரல் 17ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கவும், போஷாக்கு உணவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.