அரசியல்வாதிகளும் அரச பணியாளர்களும் நாட்டுநலனில் அக்கறை காட்ட வேண்டும்! ஈஸ்டர் தின வாழ்த்தில் யாழ் ஆயர் கோரிக்கை
இலங்கை நாட்டு அரசியல்வாதிகளும் அரச தரப்பினரும் அரச பணியாளரும் நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டு மக்களினதும் மண்ணினதும் சுபீட்சமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இந்தக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.
ஆயரின் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –
உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை 09 ஏப்ரல் 2023 இல் கொண்டாடும் வேளை இப்பெருவிழாவை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை முதலில் தெரிவிக்கிறோம்.
அதேவேளை 14 ஏப்ரல் 2023 இல் தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம். இலங்கை நாடு இன்று என்றுமில்லாத ஒரு இக்கட்டான கால கட்டத்தில் உள்ளது.
இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பல துன்பங்களையும் நெருக்கடிகளையும் அன்றாடம் எதிர் நோக்கி மனம் சோர்ந்து போயுள்ளனர். இருப்பினும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுடன் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுக்கள் தென்படத் தொடங்யுள்ளன என சற்று ஆறுதல்படலாம்.
இலங்கை நாடு பழைய நிலைக்குத் திரும்ப பல ஆண்டுகளாகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பதை நாம் எல்லோரும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் தான் இலங்கை நாடு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர முடியும் என்று தமிழ் மக்கள் போராடியும் வாதாடியும் நீண்ட காலமாக கேட்டு வந்த உண்மையை இன்று பல சிங்கள தலைவர்களும் சிங்கள மக்களும் ஓரளவு உணரத் தொடங்கியுள்ளனர் போல் தெரிகிறது.
இந்த நிலையைச் சாதகமாக்கி இனியும் காலம் கடத்தாது செயற்பட வேண்டும்.
இலங்கை வாழ் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இன, மத, மொழி மற்றும் வேறுபாடுகளை மறந்து இலங்கைத்தாயின் மக்களாக அன்புடனும் புரிந்துணர்வுடனும் வாழவும் சுபீட்சமான எதிர் காலத்தைக் கட்டி எழுப்பவும் சம்பந்தப்பட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென இலங்கை மக்கள் அனைவர் பேராலும் அன்பு அழைப்பு விடுக்கிறோம்.
எமது இன்றைய அவசர உடனடித் தேவையாக இருப்பது இன்றைய நிலையை வேகமாகச் சரி செய்து நாட்டை மேலும் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லாது பாதுகாப்பதாகும்.
இலங்கை நாட்டு அரசியல்வாதிகளும் அரச தரப்பினரும் அரச பணியாளரும் இலங்கை நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டு மக்களினதும் மண்ணினதும் சுபீட்சமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அதிகாரத்திலும் அரச பணிகளிலும் இருப்போர் மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்டு எடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
மின்சார கட்டணம் மிக அதிகரித்துள்ள நிலையில் மின்சாரத்தையும் நீரையும் மிக கவனமாகப் பயன்படுத்துங்கள். இன்னும் வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்காதவர்கள் உடன் மரக்கறி வகைகளையும் பழவகைகளையும் பயிர் செய்யுங்கள். ஒரு சிறு துண்டு நிலத்தையும் வீணாக விட்டு வைக்காமல் நமது தேவையை நாமே நிறைவு செய்வோம் எனப் பயிரிட்டுப் பயன் பெறுங்கள்.
இலங்கை நாட்டின் இன்றைய மிக இக்கட்டான நிலையில் இறைவன் அனைவருக்கும் நம்பிக்கையைத் தந்து பாதுகாத்து வழிநடத்த இறையாசீர் மிக்க செபங்களையும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை