இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் இயேசு உயிர்ப்பு பெருவிழா ஆசிச் செய்தி!
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்து மக்களின் துன்பகரமான நிலை மாறி வாழ்க்கை ஒளிமயமாக அமைய வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா ஆசிச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆசிச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு –
‘பாஸ்கா பெருவிழா கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாகவும், மறைப்பொருளாகவும் இருப்பதுடன் கத்தோலிக்க திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான பெருவிழாவாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவம் மற்றும் சாவை வென்று முடிவில்லா இருளிலிருந்து எம்மை மீட்டுக்கொண்டார்.
பாஸ்கா பெருவிழாவின்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் எனவும், அவர் நம் மத்தியில் வாழ்கின்றார் என்பதையும் கொண்டாடி மகிழ்கின்றோம்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து, அனைத்து மக்கள் இனத்தாருக்கும் உயிர்ப்பின் ஒளியை பகிர்ந்தளித்ததுடன், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் செய்துள்ளார். இதுவே, இயேசு கிறிஸ்துவின் மீது எமது நம்பிக்கையை ஆழப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.
இந்த ஆழமான நம்பிக்கையால், எமது வாழ்வின் சிலுவைகளை சுமந்து அவரோடு பயணிக்கவும் புது வாழ்வு பெறவும் உள்ளார்ந்த வலிமை கிடைக்கிறது.
எமது நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு பொருளாதார ரீதியில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் இத்தருணத்திலேயே நாம் கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றோம்.
அத்தியாவசிய பொருள்கள் மற்றும் முக்கிய வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதால், மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் மக்கள் துன்புற்று வருகிறார்கள். எவ்வாறான கஷ்டங்கள் வந்தாலும், உயிர்த்த ஆண்டவர் எம்மை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் வாழ நாம் ஒவ்வொருவரும் வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றோம். அதேவேளை, உண்மையான ஜனநாயகம் மற்றும் நீதி எமது நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் எனவும், மக்கள் அமைதியுடன் வாழ வேண்டும்.
இந்த துன்பகரமான நிலை மாற்றமடைந்து அமைதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் அமைதியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் இருப்பதற்கு வேண்டியும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவில் வாழ வரம் வேண்டி மன்றாடுவோம். – என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை