உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : ஜனாதிபதியின் அதிகாரங்களில் பெரும்பாலானவை இரத்து செய்யப்பட்டுள்ளன – நீதி இராஜாங்க அமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களில் பெரும்பாலானவை உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபு அபாயகரமானது என்றால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஜனநாயக உரிமைகளை முடக்கும் ஏற்பாடுகள் காணப்படுமாக இருந்தால், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம்.

புதிய சட்டமூலத்தை கொண்டுவரவேண்டிய தேவை கிடையாது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பொலிஸார் முன்னிலையில் சந்தேக நபர் வழங்கும் வாக்குமூலம் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இவ்விரு விமர்சனங்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கண்காணிக்கும் பொறுப்பு நீதவான் நீதிமன்றங்களுக்கு வழங்கும் வகையில் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளன.

தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், எதிர்காலத்தில் ஈடுபடவுள்ளவர்கள் தான் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என அரசியல் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெறும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக பலர் கைதுசெய்யப்பட்டனர். ஆகவே, தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் தேசிய பாதுகாப்பு என்பது பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நாட்டு மக்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்நிலையிலும் முன்னுரிமை வழங்குகிறார்கள். மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை வழங்குவோம். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபுக்கு நாட்டில் பெரும்பாலான உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

மக்களின் நடமாடும் சுதந்திரத்துக்கு எவ்வித மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் குடியரசு யாப்பில் இந்த ஏற்பாடுகள் காணப்படுகிறது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான மட்டுப்பாடுகள் விதிப்பது பொதுவானதொரு விடயமாகும் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.