தகவல் அறியும் உரிமையை அரசு முடக்க முயல்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது – பிரதான எதிர்க்கட்சி சாடல்
சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை அரசு முடக்க முயல்வது ஜனநாயகத்துக்கு விரோதமானதும் நாட்டின் அரசமைப்பிற்கும் எதிரானதுமாகும். அத்துடன் இந்தச் சட்ட மூலத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்கவும், தமக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவும் அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல மொன்றை சமர்ப்பித்து வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாட்டின் சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் இந்தச் சட்ட மூலத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்கவும் தமக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவும் அரசாங்கம் முயற்சிகிறது.
நாட்டு மக்களின் எதிர்ப்புடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பும் இருப்பதால் இதையும் தாண்டி இந்த சட்டமூலத்தை அரசாங்கம் அமுல்படுத்த முயற்சித்தால் ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் அபாய முண்டு. இந்த விடயங்கள் அனைத்திலும் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு படி பின்வாங்கியுள்ளது.
இந்த பயங்கரவாத சட்டமூலத்தை அரசாங்கம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ள போதிலும் சமூக ஊடக பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளும் ஒழுங்குகளும் சட்ட வரைவுகளும் தயாராகி வருகின்றன.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயக விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சிகள் ஏதோ ஒரு வகையில் அடக்கி முடக்கச் செய்யும் புதிய சட்டம் அரசாங்கத்துக்குத் தேவை. இப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதால் அந்தச் சட்டத்தால் செய்ய முடியாமல் போனதை இப்போது சமூக ஊடகப் பாதுகாப்பு சட்டம் மூலம் நிறைவேற்றப் பார்க்கிறார்கள்.
நாட்டு மக்களின் கருத்துக்களையும், எழுத்தையும் பரப்பும் சமூக வலைதள ஆர்வலர்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரசாங்க ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப செயல்படக்கூடிய சட்ட அமைப்பை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
இப்போது ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த சட்ட மூலம் அரசாங்கம் இரண்டு செயல்பாடுகளை எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகிறது.
முதலாவது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய ஆணைக்குழுவை நிறுவுதல். 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு சட்டத்தை இரத்துச் செய்வது. இரண்டாவது 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துரிமை பொறுப்புச் சட்டத்தை நீக்குவதும் இதற்கு மாற்றீடுகளாக புதிய சட்டமூலத்தை கொண்டுவருவது மாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை