நாட்டில் மோசமான நிலைமை வரலாம்! சாலிய பீரிஸ் எச்சரிக்கை
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வரையறை இல்லாத அதிகாரம் வழங்கி இருக்கிறது.
இது மிகவும் பயங்கரமானது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் பயங்கரவாதத்தைத் தடுப்பதென்ற அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரைக் கைதுசெய்து 90 நாள்கள் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடன் தடுத்துவைக்க முடியும்.
அத்துடன் சட்டத்தின் பிரகாரம் குறித்த சந்தேக நபரை 48 மணி நேரத்துக்கு முன்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினாலும் 90 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவை நீக்குவதற்கு நீதிவானுக்கு முடியாது.
நீதிபதியையும் தாண்டிய அதிகாரமே பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக வழங்கப்படுகிறது.
அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதான பிரச்சினையாக இருப்பது பயங்கரவாதம் என்றால் என்ன என வரையறுக்கப்படுவதில் இருக்கும் தெளிவின்மையாகும்.
அதேநேரம் பல்வேறு அமைப்புகளைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் உறுப்புரைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பல விடயங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதில் சில சரத்துக்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் வகையில் அமைகின்றன.
அதனால் இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால் மிகவும் பாதகமான நிலைமை நாட்டில் ஏற்படலாம்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து இதில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது இதனை தோற்கடிக்க வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை