பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்ள வில்லை – ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல இருப்பவர்களுக்கு வசதி கருதியே சற்று பிற்படுத்தி இருக்கிறோம்.
அத்துடன் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் அதற்கு மாற்று வழியை தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த சட்டமூலத்துக்கு எதிராக போராட்டங்களையும் சிலர் முன்னெடுத்திருந்தனர். தற்போது நீதிமன்ற விடுமுறை காலமாகும். இவ்வாறான நிலையில் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தால். அதனை எதிர்ப்பவர்களுக்கு நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டே சற்று தாமதித்து சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அத்துடன் சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல யாராவது எதிர்பாத்திருந்தால், அவர்களுக்கு அந்த ஜனநாயக உரிமை இருக்கவேண்டும். அதனை கருத்திற்கொண்டே சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை சற்று தாமதித்திருக்கிறோம். மாறாக அரசாங்கம் போராட்டத்துக்கு அஞ்சி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறவில்லை.
மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சரியில்லை. அது ஜனநாயகத்துக்கு விராேதம் என தெரிவிப்பவர்கள் அதற்கு மாற்று வழி என்ன என்பதை தெரிவிக்கவேண்டும். தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் கடினமானது. மனித உரிமையை மீறும் விடயங்கள் அதில் இருப்பதாக தெரிவித்தே, புதிய திருத்தம் மேற்கொள்ளுமாறு பலரும் தெரிவித்திருந்தனர். சர்வதேச அமைப்புகளும் தெரிவித்து வந்தன. அதன் பிரகாரமே தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் நபர் ஒருவரை கைதுசெய்யவும் முடியும் அவரை தடுப்புக்காவலில் வைக்கவும் முடியும். அதேபோன்று அவசரகால சட்டத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம். அவர்களை தடுத்து வைப்பதற்கு ஜனாதிபதி கைச்சாத்திட முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் அதில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதியின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டு. தடுத்துவைக்க கைச்சாத்திடும் அதிகாரம் பிரதி பொலிஸ் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரேசத்தில் பிரதி பாெலிஸ்மா அதிபருக்கு அந்த அதிகாரம் வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல்போகிறது.
அத்துடன் புதிய சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என வரையறை செய்யப்படவில்லை என சில குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத யாராக இருந்தாலும் அவர் பயங்கரவாதி என்றே கருதப்படும். சட்டத்தை மீறுகின்றன்வர்கள் பயங்கரவாதி என்ற பட்டியலுக்கு வராது. அதனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களினதும் நாட்டினதும் நலன்கருதியே கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில் தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றார்.
கருத்துக்களேதுமில்லை