சர்வதேச நாணய நிதியம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஐந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐந்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் நட்டமடைந்துள்ளதுடன் எரிபொருள் துறையில் சிறந்த புலமையும் கிடையாது. நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல விமர்சனங்கள் காணப்படுகின்ற நிலையில் ஒருசில ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க சிறந்த முறையில் செயற்படுகிறார். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடுவதால் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஊடாக ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இவ்வாறான நிலைதான் ஏற்பட்டது.
எல்லையற்ற ஊழல் மோசடி பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணியாக உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் அரசியல் அழுத்தம் காணப்படும்போது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் எவ்வாறு செயற்படுத்தப்படும். அரச நிர்வாகத்தில் எவ்வாறு வெளிப்படைத் தன்மை பேணப்படும்.
விவசாயத்துறை மேம்பாட்டுக்காக நிதி உதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. நிதி உதவி தொடர்பான கணக்காய்வு பொறுப்பை இலங்கைக்கு வழங்க முடியாது. தாம் நேரடியாக கணக்காய்வு செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளமை இலங்கைக்கு பாரிய அவமானமாக உள்ளது. அனைத்து நிறுவனங்கள் மீதும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு காணப்படுகிறது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பிணைமுறி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அரச நிதியை மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ நிறுவனம், லங்கா வைத்தியசாலை, டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும்போது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடி நிலை தோற்றம் பெறும். டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு ஏதாவதொரு வழிமுறையில் பாதிப்பு ஏற்படும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஐந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
குறித்த ஐந்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் நட்டமடைந்துள்ளன. அத்துடன் எரிபொருள் துறை சார்ந்த எந்த அனுபவமும் இந்த நான்கு நிறுவனங்களுக்கு கிடையாது.
நட்டமடையும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு அரச வளங்களை கையளித்தால் அவர்கள் மிகுதியாக இருப்பதை மோசடி செய்துவிட்டு செல்வார்கள். ஆகவே, அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை