சாவகச்சேரி புத்தூர் சந்தியில் ஒருவர் குத்திப் படுகொலை!
யாழ். சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது –
மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக கடந்த(செவ்வாய்க்கிழமை) சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம்(10) குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நாகராஜா என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.
அப்போது, ரயில் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.
இதன்போது இளைஞரின் உறவினர் ஓட்டோவில் வீதியோரத்தில் காத்திருந்தார்.
இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் ரயில் கடவையில் அமர்ந்து கொண்டார்.
வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.
நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், ரயில் வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.
இதன்போது, ‘பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்’ என இளைஞர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வீட்டு முற்றத்துக்குச் சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார்.
இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.
சடலமாக மீட்க்கப்பட்டவர் 48 வயதுடைய நாகராஜா என்பவராவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை