பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறலாம். எனவே இது குறித்து பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

காலாவதியான பொருட்கள் கவர்ச்சிகரமான முறையில் குறைந்த விலைகளில் விநியோகிக்கப்படுகின்றன. இதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளும் குழுக்கள் மற்றும் நபர்கள் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுகின்றனர்.

மேலும் பொருட்கொள்வனவுக்கு அல்லது இதர தேவைகளுக்கு வெளியில் செல்பவர்கள் பெறுமதிமிக்க தங்க நகைகள் அணிவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

பணப்பை உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்கள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் . ஏனெனில் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளும் தரப்பினர் பொது இடங்களிலேயே அதிகம் சுற்றித் திரிகின்றனர்.

இதேவேளை, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்கலாம்.

மேலும் சித்திரை புத்தாண்டு விசேட விழாக்களை ஏற்பாடு செய்பவர்கள் அதில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.