தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நலன்புரி சங்கப் பராமரிப்பாளர் கொலை! நடந்தது என்ன?
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் பராமரிப்பாளராகக் கடமையாற்றிய ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த மேரிதாசன் நாகசெல்வன் என்ற நலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு சேவையின் பராமரிப்பாளர் தென்மராட்சியின் மீசாலை, புத்தூரில் கோரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பில் நோயாளர் நலன்புரிச் சங்க நிர்வாகத்தால் இன்று (வியாழக்கிழமை) விசேட நிர்வாகசபைக் கூட்டம் நடத்தப்பட்டு, சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
பொறுப்புவாய்ந்த சங்கத்தின் செயலாளர் என்ற வகையிலும் எமது விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் எனது அறிவுக்கெட்டிய வகையில் சம்பவம் தொடர்பான விவரத்தை இங்கே தருகின்றேன்.
கடந்த 10-04-2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணிக்கு வைத்தியசாலையின் 7 ஆம் விடுதிக்கு பி.ஆகாஷ் என்ற நோயாளி சேர்க்கப்பட்டு;ளார். அவரது உறவினர் ஒருவர் எமது சங்கத்திடம் பராமரிப்பாளர் ஒருவர் தேவை என்ற கோரிக்கை முன்வைத்தார். அதன்படி எமது சங்கம் அவருக்கு பராமரிப்பாளர் ஒருவரை நியமித்தது. அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணிக்கு நோயாளி வைத்தியசாலை நிர்வாகத்திடமோ அன்றி நலன்புரிச் சங்கத்தின் பராமரிப்பாளரிடமோ எதுவும் தெரிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அவரை வைத்தியசாலை முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய விடுதி பொறுப்பாளர்களும் பராமரிப்பாளரும் அவர் தவறியுள்ளார் என்று பதிவேட்டு ஆவணத்தில் பதிவிட்டுள்ளனர்.
பின், அவரது உறவினர் ஒருவர் அவர் வீடு வந்துள்ளார். என்மீது மிகுந்த கோபத்தில் உள்ளார் என்றுகூறி சங்கத்தில் அவரைப் பராமரித்த பராமரிப்பாளரை, தமது வீட்டுக்கு வந்து அவரை அழைத்துச் சென்று வைத்தியசாலையில் சேர்க்கும்படி கூறியுள்ளார். அதற்கு பராமரிப்பாளர், என்னால் அங்குவந்து அழைத்துவர முடியாது. நீங்கள் வேண்டுமென்றால் பொலீஸில் அறிவியுங்கள். அவர்கள் அழைத்துவரட்டும் என்று அது தனது கடமையில்லை என்பதால் மறுத்துள்ளார். பின்னர், அவரை முன்பு விடுதியில் இருந்த காலத்தில் பராமரித்த – தற்போது கொலையுண்ட நாகசெல்வன் என்பவரிடம் அவரது உறவினர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். மனிதாபிமானம், கருனை என்பவற்றை தனது சிந்தையில் இருத்திய நாகசெல்வன், சங்கத்தில் எந்த அனுமதியும் பெறாமல், தான் பொறுப்பேற்று பார்வையிட்ட நோயாளியையும் வேறு எவரிடமும் ஒப்படைக்காமல் ”அவர் என்னுடன் நல்ல நட்புடையவர். நான் சொன்னால் அவர் கேட்பார். நான் சென்று அவரை அழைத்துவந்து வைத்தியசாலையில் ஒப்படைக்கிறேன்” – என்று கூறிவிட்டு நேற்று (புதன்கிழமை) மதியம் பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து பிறிதொரு பஸ்ஸில் மீசாலை சென்றுள்ளார். அதன்போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
01. இதில் கொலையுண்ட பராமரிப்பாளர் உண்மையில் அந்த நோயாளியின் பராமரிப்பாளர் அல்லர்.
02. பராமரிப்பாளர்களைத் தொலைபேசியில் அழைத்த நோயாளியின் உறவினர், முறைப்படி நலன்புரிச் சங்கத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் முறைகேடாக பராமரிப்பாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு வைத்தியசாலைக்கு வெளியே அழைத்துள்ளார்.
03. மனிதாபிமானம், கருணை என்பவற்றின் காரணமாகவே அவர் அவரை அழைத்துவரச் சென்றுள்ளார்.
04. அவர், அந்த நேர சூழ்நிலையில் சங்கத்திடம் எந்த அறிவிப்பும் வழங்காமல் தான் பொறுப்பெடுத்த கடமையையும் ஆற்றாமல் வைத்தியசாலையை விட்டு வெளியே சென்றுள்ளார்.
05. இவர் கொலையுண்டமை தொடர்பாக நோயாளியின் உறவினர் சங்கத்திடம் எந்தத் தகவலும் இதுவரை வழங்கவில்லை.
என்றும் நோயாளர் சேவையில்,
லயன் சி.ஹரிகரன்
செயலாளர்,
நோயாளர் நலன்புரிச் சங்கம்,
ஆதார வைத்தியசாலை,
தெல்லிப்பழை.
கருத்துக்களேதுமில்லை