புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளனவா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்! நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.
சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பாகத் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான பரிசீலனைகளின் அடிப்படையில் திருத்தங்களை செய்ய வேண்டியேற்படின் அரசாங்கம் நிச்சயம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என நீதி , சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது தொடர்பாகத் தெளிவான விளக்கமின்றியும் சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த சட்ட மூலத்தில் பிரதானமாக இரு விடயங்களில் மாத்திரமே மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
அதற்கமைய பாதுகாப்பு அமைச்சருக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிப்பதற்கு காணப்படும் அதிகாரத்தை அவரிடமிருந்து நீக்கி , பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்படக் கூடியவாறு சட்ட முறைமையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கும் முறைமை நீக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தன்னிச்சையாக செயற்படக் கூடிய சூழல் உருவாகக் கூடாது என்பதற்காகவே அவர்களின் செயற்பாடுகளை நீதிவான் நீதிமன்றங்களின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தன்னிச்சையாக செயற்படுவதைத் தடுப்பதற்கு தற்போதுள்ள முறைமையின் அடிப்படையில் அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் தன்வசம் வைத்துக் கொள்வது பொறுத்தமானதா என்று இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த சட்ட மூலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை எம்மால் குறிப்பிட முடியாது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கடந்த 4 ஆம் திகதி இந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்திருக்க முடியும்.
எனினும் இவ்வாரம் விடுமுறைக் காலம் என்பதால் தமக்கான கால அவகாசம் போதாது எனக் குறிப்பிட்டு காலம் தாழ்த்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாத இறுதி வாரத்தில் சட்ட மூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்களுக்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை