தமிழ், சிங்கள புத்தாண்டு தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

ஒரே சுபநேரத்தில், தனித்துவமான பல்வேறு பாரம்பரியங்களை மரபுரிமையாகக் கொண்ட தினமாக சிங்கள – தமிழ் சித்திரைப் புத்தாண்டு திகழ்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இம்முறை நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக எமது விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட சவால்மிக்க பணிகளை இந்தப் புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

இயற்கையோடு உறவாடிய எமது முன்னோர்கள் புத்தாண்டில் அதனை இன்னும் நிஜமாக்கினர்.

அவர்களின் வாரிசுகளான எமக்கு உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், எமது பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை பற்றி மீண்டும் மீண்டும் கூற வேண்டிய தேவையில்லை. செயற்படுதலே எமக்கு முன்னுள்ள தேவையாகும்.

கடந்த காலங்கள் எமக்கு சிந்திப்பதற்காக பல விடயங்களை விட்டுச் சென்றுள்ளன.

தொற்றுநோய் அனர்த்தம், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் போன்றன அண்மைக்கால வரலாற்றில் நாம் காணாத விடயங்களாகும்.

அவற்றை மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாதிருப்பதற்கும் புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனியதோர் புத்தாண்டு இன்றிலிருந்து மலரட்டும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.