போர் விமானங்களை புதுப்பிக்க இஸ்ரேலுடன் 55 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ; உண்மையை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலைமையோ அல்லது யுத்த சூழலோ அற்ற இந்த சந்தர்ப்பத்தில் போர் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக இஸ்ரேலுடன் 55 மில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் மருந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த சந்தர்ப்பத்தில், போர் விமானங்களை புதுப்பிப்பதற்காக 55 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகின்றமை சாதாரணமான விடயமல்ல என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், எவ்வித அவசர தேவையும் இன்றி இலங்கை விமானப்படை வசமுள்ள கப்பீர் போர் விமானங்களை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலுடன் 55 மில்லியன் டொலர் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தமோ அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பாரிய பிரச்சினைகளோ அற்ற இந்த சந்தர்ப்பத்தில் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக 55 மில்லியன் டொலரை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதெனில், அது பாரதூரமானதாகும். மருந்து உள்ளிட்டவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவது பொருத்தமற்றது.

இது தொடர்பாக அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும். இதன் ஊடாகப் பாரிய மோசடிகள் இடம்பெறவுள்ளன எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை விடுத்து நாட்டுக்கு அத்தியாவசிய தேவைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.