விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளடக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்
நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய பிரத்தியேக செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப்பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்திக்கான நிதியிடல் கூட்டம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமானது.
நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரின் முதலாம் நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு –
நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இணங்கிய அபிவிருத்தி இலக்குகளின் அடைவு மந்தகரமான நிலையில் காணப்படுவதுடன், அதனை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் அடைந்துகொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் நிலவும் சூழ்நிலையிலேயே இப்போது நாம் சந்தித்திருக்கின்றோம்.
இந்த அபிவிருத்திச் செயற்திட்டம் கொவிட் – 19 பெருந்தொற்றுக்கு முன்னரும்கூட வேறுபல காரணங்களால் மந்தகரமான நிலையிலேயே காணப்பட்டது.
இது கொவிட் – 19 பெருந்தொற்று தொடக்கம் உக்ரேன் மீதான படையெடுப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் மேலும் பாதிப்படைந்தது.
எனவே, ஏற்கனவே அடைந்துகொள்வதற்கு இணக்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகள் இன்னமும் அடையப்படாததன் விளைவாக தற்போது பூகோளமயமாக்கச்செயன்முறை மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போதுமானதும், நிலையானதுமான நிதியிடல் இல்லை என்பதே 2030 ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் பெரும்பாலான நாடுகள் முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவாலாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய ரீதியில் இதனை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ‘அரசியல் தேவைப்பாடு’ உள்ளதா?, குறிப்பாக அபிவிருத்திசார் உதவிகள், கடன்மறுசீரமைப்பு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைசார் உதவிகளை உள்ளடங்கலாக ஏற்கனவே இணங்கிக்கொள்ளப்பட்ட செயன்முறைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் சர்வதேச நிதியியல் கட்டமைப்பை எவ்வாறு மறுசீரமைப்பது? என்பது குறித்து விசேட அவதானம் செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடனான சந்திப்புக்களில் பங்கேற்றதன் பின்னரே நான் இங்கு வருகைதந்திருக்கின்றேன்.
தற்போது பூகோள ரீதியில் நாம் முகங்கொடுத்திருக்கும் சவால்களால் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் – 19 பெருந்தொற்றின் பின்னரான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகள் இறுக்கமான நிதி மற்றும் நாணயக்கொள்கையை நடைமுறைப்படுத்திவருகின்றன.
இருப்பினும் அபிவிருத்தியடைந்துவருகின்ற அநேக நாடுகளால் அதனைச் செய்யமுடியாது என்பதுடன் அவை அதிகரித்த கடன்களாலும், உயர்வான வட்டிவீதங்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கையும் அண்மையகாலங்களில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்நிலையில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவுடன்கூடிய செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம். அதன்படி பொருளாதார மீட்சியை முன்னெடுத்திய கடினமான கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எமது அரசாங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை