தேசிய பாதுகாவலனாக கோட்டாவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் ஏமாந்துள்ளனர் – சம்பிக்க

தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவுசெய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், 43 ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பிரதான தேர்தல் பிரசாரமாக்கி ராஜபக்ஷர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம், கருத்தடை உள்ளிட்ட பல விடயங்கள் பொதுஜன பெரமுனவின் மேடை பேச்சுகளாக காணப்பட்டன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டு மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய பாதுகாவலனாகத் தெரிவு செய்தார்கள்.

இறுதியில் ஏமாற்றமடைந்தார்கள். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கத்துக்காக இடம்பெற்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் நான்கு பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

யங்கரவாதி சஹ்ரான் உட்பட அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் உயிரை ஏன் தியாகம் செய்தார்கள்.

பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.இல்லாவிடின் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் இடம்பெற்றது.

21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட சஹ்ரானின் தரப்பினர் நியூஸிலாந்து நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பலிவாங்குவதற்காகவே தேவஸ்தானங்களில் தாக்குதலை நடத்தினோம் என குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

யங்கரவாதி சஹ்ரான் யார்? குண்டுத்தாக்குதல் ஒரு குழுவின் நோக்கமா அல்லது சர்வதேச நோக்கமா?

2010 ஆம் ஆண்டு பூனே வெதுப்பக வெடிப்பு சம்பவம், 2016 ஆம் ஆண்டு டாகா கெபே தாக்குதல் ஆகியவற்றுக்கும் 2019 ஏப்ரல் 21 சங்ரில்லா ஹோட்டல் குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.வலய மட்டத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் தேசிய பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தவில்லையா?,தென்னிந்தியாவில் இருந்து செயற்பட்ட அபுஹிந்த் மௌலவி யார்?அடிப்படைவாத பிரசாரகரா?இல்லாவிடின் அடிப்படைவாத தரப்பினரது ஆதரவாளரா ?

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத்தாக்குதலை வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எவ்வாறு முன்கூட்டியே அறிந்துகொண்டது ? இறந்து விட்டதாக குறிப்பிடப்படும் சாராவுக்கும்,அபுஹிந்த் மௌலவிக்கும் இடையிலான தொடர்பு என்ன?

இலங்கை புலனாய்வு பிரிவு தகவல் அறிந்தும் ஏன் செயற்படவில்லை?

புலனாய்வு பிரிவுக்கும், பொது பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாடற்ற தன்மை (பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் (ஏப்ரல் 22 )இடம்பெற்ற திறந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

அரசாங்கம் குறிப்பாக இராணுவ புலனாய்வு பிரிவு தௌஹீத் ஜமாதே அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அவர்களால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை காணப்பட்டது.புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பற்ற தன்மையால் பயங்கரவாதி சஹ்ரான் தனது நோக்கத்தை சரியாக செயற்படுத்திக் கொண்டான்.

ராஜபக்ஷர்கள் செயற்படுத்திய முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

பிரபாகரனுக்கு பின்னர் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதன்,கிழக்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் ராம், நகுலன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் 12000 போராளிகளுடன் அவர்களையும் விடுதலை செய்தமை.

மறுபுறம் பிள்ளையானை ராஜபக்ஷர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக இணைத்துக் கொண்டமை, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கி கணக்கு,கப்பல்,தங்க ஆபரணங்கள்,உள்ளிட்ட சொத்துக்களுக்கு நேர்ந்ததை பத்மநாதனும் குறிப்பிடவில்லை,அரசாங்கமும் குறிப்பிடவில்லை.அரசாங்கம் டீல் அரசியல் செய்யாமல் முறையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர போராடிய படையினர் யுத்த குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தரப்பினர்கள் ராஜபக்ஷர்களால் பாதுகாக்கப்பட்டார்கள்.ராஜபக்ஷர்களின் முட்டாள்தனமாக பாதுகாப்பு கொள்கை தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது.

நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்த நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை. அரசியல் அழுத்தம் பாதுகாப்பு கட்டமைப்பை ஆதிக்கம் செலுத்தும் வரை ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடையாது.காலமே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.