அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

“பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில், பொருளாதாரம் மேம்பட்டு – பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் முடியாட்சியின் போதும் சரி குடியாட்சியின் போதும் சரி இந்த நாடு மேம்பட வேண்டுமென பாடுபட்டவர்களே எமது முஸ்லிம் சகோதரர்கள். எவ்வளவுதான் நெருக்கடிகள் வந்தாலும் ஈகை குணத்தை அவர்கள் கைவிட்டதில்லை. இஸ்லாம் மதம் போதிக்கும் நல்ல விடயங்களை பின்பற்றி வாழ எத்தனிப்பவர்கள். அந்தவகையில் இம்முறை பெருநாளை கொண்டாட தயாராகும் இலங்கை மற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் பல முஸ்லிம் சகோதரர்கள் முதலாளிமார்களாக உள்ளனர். எனவே, தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட அவர்கள் மேலும் பல நகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த நன்நாளில் முன்வைக்கின்றேன்.

இலங்கையில் நோன்பு பெருநாள் காலங்களில் எமது இஸ்லாமிய சொந்தங்களுக்கு எதிராக சில விஷமிகள் சில தீய செயல்களை கட்டவிழ்த்துவிடுவது நடந்து வருகின்றது. இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் எமது குரல் எப்போதும் ஒலிக்கும்.

இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடைகளை வழங்கி அனைவருமாக அன்போடும், பண்போடும், இறைபக்தியோடும் பெருநாளை கொண்டாடுவோம்.” என்றுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.