எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில்,

ரமழான் நோன்பு காலம் முடிந்த பிறகு உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பெருநாளை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகின்றனர்.

திருக்குர்ஆன் மற்றும் முஹம்மது நபியின் போதனைகளின்படி சமயச் சடங்குகளை முறையாகக் கடைப்பிடித்து இலங்கை முஸ்லிம் மக்களும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

ஈதுல் பித்ர் எனப்படும் “நோன்புப் பெருநாள்”, அடுத்த மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஆரம்பமாகின்றது.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால், உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற ஆதரவு அளப்பரியது.குறிப்பாக பல்லாண்டு காலம் இந்நாட்டு சகோதர முஸ்லிம் மக்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இலங்கையின் அடையாளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் பங்குதாரர்களாவர்.

அதனை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதுடன்,மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் நல்லிணக்கப் பாதைக்கும் துணிச்சலுடன் உழைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூருவோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.