அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் – நாமல் கவலை
நல்லாட்சி அரசாங்கத்தினால் வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரத்தையே 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தளை பகுதியில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அந்த தீர்மானத்தை ஒரே கட்டத்தில் செயற்படுத்தப்படுத்தியமை பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு சேதன பசளை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு தரப்பினர் வழங்கிய தவறான ஆலோசனையால் சேதன பசளை திட்டம் தோல்வியடைந்தது.
உர பற்றாக்குறை,எரிபொருள் மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்பு மக்கள் போராட்டத்தை தோற்றுவித்தது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தவே காலி முகத்திடல் போராட்டம் தோற்றம் பெற்றது.
போராட்டம் ஊடாக இளைஞர் யுவதிகள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள். காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முன்னிலையில் இருந்து செயற்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக அறிய முடிகிறது.தவறாக வழிநடத்தப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.
மின் விநியோக நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு மெகாவாட் மின் அலகு கூட தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த ராஜபக்ஷர்கள் மீது பொய்யான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாகியுள்ளோம்.
மோசடி செய்யப்பட்ட அரச நிதியை ராஜபக்ஷர்கள் உலக நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வாறான நிதி ஏதும் பதுக்கப்பட்டிருக்குமாயின் அவற்றை அரசுடமையாக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
கருத்துக்களேதுமில்லை