நட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு முன் நியூ டைமன் கப்பலை வெளியேற்ற ஜயநாத் கொலம்பகே ஆலோசனை – நீதியமைச்சர்

நியூ டைமன் கப்பல் தீ விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யாமல் நாட்டின் கடற்பரப்பில் இருந்து கப்பலை வெளியேற்ற வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் மற்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ள நிலையில் கப்பலை வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மின்னஞ்சல் செய்தி ஊடாக அறிவித்துள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இருபத்தேழு ,இரண்டின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் கடந்த 2020.09.09 ஆம் திகதி விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பல் விவகாரம் பிறிதொரு பேசுபொருளாக காணப்படுகிறது.

இந்த கப்பல் விபத்தால் சமுத்திர வளங்கள், தீ பரவலை கட்டுப்படுத்த நாரா நிறுவனம் செலவு செய்த நிதி தொகை,மீனவ சமூகத்துக்கு தொழிற்துறையால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றுக்கு 250 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி குறித்த நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் மூன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் யாருக்கு அழைப்பானை விடுப்பது என்பது பிரதான பிரச்சினையாக உள்ளது. நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கோருவதற்கான மதிப்பீட்டை உறுதிப்படுத்த முன் நாட்டின் பரப்பில் இருந்து வெளியேற கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் பலமுறை பொறுப்பான தரப்பினருக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.இருப்பினும் சட்டமாதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் கப்பல் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த கப்பலை வெளியேற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார் எனக் குறிப்பிடுகிறது. இவ்விடயம் தொடர்பில் அவரிடம் பலமுறை பேச்சில் ஈடுபட்டேன்.நட்டஈடு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தீர்மானங்களை முழுமையாக செயற்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.கப்பலை வெளியேற்றுமாறு அவர் குறிப்பிட்டார் என எந்த இடத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடற்பரப்பில் இருந்து கப்பலை வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மின்னஞ்சல் ஊடாக பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்துள்ளார். இதனை கடல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் எவ்வாறு கப்பல் விவகாரத்தில் தலையிட முடியும் என்பது சந்தேகத்துக்குரியது.இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா கப்பலை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது விடயங்கள் வெளிப்படுகின்றன.

நாட்டின் கடற்பரப்பில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டைமன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றது.வழங்கிய ஒத்துழைப்புக்கு இந்திய கடற்படை 895 மில்லியன் ரூபா கோரியுள்ளது.இந்த நிதியை வழங்க வேண்டும்.ஆகவே இரு கப்பல்களையும் அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இந்த நிதியையும் உள்ளடக்குமாறு சட்டமாதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.