ஆலையடிவேம்பு கண்டக்குழி குளத்தை மண்கொட்டி குளம் அபகரிக்க முயற்சி! தடுத்து நிறுத்திய பிரதேச செயலாளார்
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தை மண் நிரவி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வரை பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள இந்து மயானத்துக்கு எதிராகவுள்ள கண்டக்குழி குளத்திலிருந்து அந்தபகுதி விவசாயிகள் வயல் நிலங்களுக்கு நீரை பெற்றுவருவதுடன் கால்நடைகளும் அந்த குளத்து நீரைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த கால யுத்த சூழல் காலத்தில் அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருந்த நிலையில் தமிழ் மக்கள் அங்கு செல்லமுடியாத சூழலை பயன்படுத்தி ஒரு தரப்பினர் குளத்தின் ஒரு பகுதியை அபகரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபா செலவில் பிரதேச செயலகத்தால் புனரமைக்கப்பட்ட அந்த குளத்தின் அருகில் சிலர் அடிக்கடி சென்று தமது நிலம் என சொந்தம் கொண்டாடி குளத்தை அபகரிக்க முற்பட்டு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.
இவ்வாறான நிலையில் அக்கரைப்பற்று எல்லை பகுதியிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அரச காணிகள் குளங்கள் வெள்ளநீர் ஓடும் வாய்க்கால்களை சிலர் திட்டமிட்டு சட்டவிரோதமாக அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக இந்த கண்டக்குழி குளத்தின் ஒரு பகுதியில் திடீரென அந்த பகுதியை சேராத ஒருவர் கனரக வாகனத்தில் மண்ணைக் கொண்டுவந்து கொட்டி குளத்தை நிரப்பும் செயற்பாட்டில் ஈடுபடுவதை பொதுமக்கள் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து உடனடியாக பிரதேச செயலாளர் சென்று குள அபகிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதேவேளை குளத்தின் அருகிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் இருந்து கழிவான உமிகளை குளத்தினுள் கொட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை