சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கரிசனை திருப்தியளிக்கவில்லை – சந்திரிகா
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கமும் குறிப்பாக கல்வி அமைச்சும் இவ்விடயத்தில் தற்போதுள்ளதை விட பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
‘விழிகளுக்கு கண்ணீரால் விடைகொடுத்து உதிர்ந்து போனது வெண் மலர்’ என்ற கதை நூலின் அறிமுக நிகழ்வு புதன்கிழமை (26) கொழும்பில் அமைந்துள்ள தேசிய பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, விசேட அதிதியாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நான் ஆட்சியைப் பொறுப்பேற்ற காலத்தில் சிறுவர் மற்றும் மகளிருக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 10 இடங்களுக்குள் காணப்பட்டது.
இந்நிலையில் எனது ஆட்சி காலத்தில் கொழும்ம்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதியொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து முதன் முறையாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். அதனைத் தொடர்ந்து சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான சர்வதேச மட்டத்திலான தரப்படுத்தலில் இலங்கை முன்னிலை வகிக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் இந்த நிலைமை தற்போது மாற்றமடைந்து வருகிறது. சிறுவர்கள் மீதான வன்முறைகள் , துன்புறுத்தல்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக கல்வி அமைச்சு இவற்றை தடுப்பதற்கு முன்னின்று செயற்பட வேண்டும்.
எனவே சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அரசியல் நியமனங்கள் அன்றி துறைசார் விசேட நிபுணர்கள் அவற்றுக்கு நியமிக்கப்பட வேண்டும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்காமல் இவரானவர்களுக்கு அதிகாரங்களை வழங்கி சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை