சர்வதேச நாணய நிதியத்தினது அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தோம்!  சுசில் பிரேம ஜயந்த அடித்துக் கூறுகின்றார்

எந்த வங்கிகளிலும் எந்த நாட்டிலும் கைம்மாற்று முறையிலாவது கடன் பெற முடியாத ஒரு நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கை கொடுத்தது.

சர்வதேச நிதியத்தின் அத்தனை நிபந்தனைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை எனினும் நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை  சட்டத்தைக் கொண்டு வந்து  அரசு நடைமுறைப்படுத்தும் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின்   கீழான ஏற்பாட்டை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு வங்கியல்ல.

அவ்வாறு எண்ணிக்கொண்டே பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகளில் பெருமளவு நாடுகள் அதில் அங்கத்துவம் வகிக்கின்றன. அது ஒரு நிதியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த நிதியத்தின் பெரும் பகுதியை அமெரிக்கா கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ஜப்பான், சீனா போன்ற நாடுகள் உள்ளன.

நாம் சீனாவிடமும்  7 பில்லியன் டொலருக்கும் அதிகமான இருதரப்பு கடனைப் பெற்றுக் கொண்டுள்ளோம். அது பிரத்தியேகமானது.

பெருமளவு நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் நிதியத்திடமே எமது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் கடன் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளோம்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி வேறு காலங்களை விட வித்தியாசமானது. அந்த வகையில் இதற்கு முதல் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றதற்கும் இம்முறை சென்றதற்குமிடையில் வித்தியாசம் காணப்படுகிறது. இப்போது நாம் அந்த நிதியத்திடம் சென்றது தவறு என்றால் அப்போது சென்றதும் தவறுதான்.

நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் 16 தடவைகள் சென்றுள்ளோம்.

இம்முறை நாம் கண்டிப்பாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில் வேறு எந்த நாடுகளும் எமக்கு கடன் தராத நிலைமையே காணப்பட்டது.

கொடுத்த கடன்கள் அத்தனையையும் அந்த நாடுகள் நிறுத்தின. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு வங்குரோத்து அடைந்தது. அப்போது அதற்கு ஆதரவாக பேசிய, அமைச்சரவையில் இருந்தவர்களே இப்போது பல்வேறு எதிர் கருத்துக்களை முன் வைக்கின்றனர். நாம் அப்போது அமைச்சரவையில் இருக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்கின்றமை தொடர்பில் தர்க்கங்கள் காணப்படுகின்றன. அது வேறு விடயம். எமக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

எனினும் நான் வங்கியொன்றின் வாடிக்கையாளர் என்றால் எனக்கு நிதி நெருக்கடி இருக்குமானால் நான் அந்த வங்கியிடம் சென்று தான் கடன் கேட்க வேண்டும். அவ்வாறு வங்கி கடன் தரும் போது நான் விரும்பிய விதத்தில் அந்த கடனை வங்கி ஒருபோதும் கொடுக்காது.

மாறாக அதனை என்னால் மீள செலுத்த முடியுமா என்பதை கட்டாயம் பார்க்கும். நான் எவ்வாறு கடன் பட்டேன் என்பதையும் சாதாரண பொருளாதார நிலையில் எவ்வாறு அதனை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் பார்க்கும்.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தில் நாம் அங்கத்தவர்கள். இதற்கு முன்னரும் அங்கு சென்றுள்ளோம்.

நாட்டுக்கு கிடைத்த அனைத்து கடன்களும் நிறுத்தப்பட்ட நிலையில் அந்நிய செலாவணி வருமானம் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் மத்திய வங்கி மற்றும் வங்கிகள் வெளி வர்த்தக நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெறும் நிலையே காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவலாம். எனினும் எந்த வங்கிகளிலும் எந்த நாட்டிலும் கைம்மாற்று முறையிலாவது கடன் பெற முடியாத ஒரு நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கை கொடுத்தது.

அவ்வாறு அந்த நிதியம் வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ள நிலையில் இப்போது எமக்கு கடன் பற்றுப் பத்திரத்தை  பெற்றுக் கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிபந்தனை தான் ஊழல் மோசடிகளை நிறுத்துவது. அந்த சட்டம் மூலம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.