கருத்து முரண்பாடுகள் கட்சியின் பிளவுக்கு ஒரு போதும் வழிவகுக்காது – திஸ்ஸ அத்தநாயக்க
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் கட்சி அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும். இதன் போது திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எரிபொருட்களின் விலைகள் குறுகிய காலத்திற்குள் இரு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனால் ஏற்படக் கூடிய ஏனைய பயன்கள் இதுவரையில் மக்களை சென்றடையவில்லை. எனவே இதனால் கிடைக்கக் கூடிய சலுகைகளை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட வேண்டும்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் , ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் அது குறித்த முன்னேற்றங்கள் எவையும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.
எமது பொருளாதாரத்தை இலகுவாகக் கட்டியெழுப்பக் கூடியளவுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பினை இழக்கும் வகையில் செயற்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் அதிலுள்ள ஏற்பாடுகள் முற்று முழுதாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
எனவே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து , அவர்களின் முன்மொழிவுகள் , பரிந்துரைகளைப் பெற்று திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
பொதுத் தேர்தலொன்றின் ஊடாக ஆட்சியமைக்கக் கூடிய பலம் ஐக்கிய மக்கள் சக்திக்கு காணப்படுகிறது. எனவே எவருடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை