பஷிலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது ரணிலுக்கு பாரிய தடையாக அமையும் -உதய கம்மன்பில

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணையப் போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

மே தின கூட்டத்துடன் மக்களாணையை வென்று விட்டோம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுகின்றமை நகைப்புக்குரியது. கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படை கொண்டு பொதுஜன பெரமுனவுக்கு குறிப்பாக ராஜபக்ஷர்களுக்கு மக்களாதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது. பொதுஜன பெரமுன பிரம்மாண்டமாக அமைத்த கூடாரங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன.

நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்ற நிலை மாற்றமடைந்து விட்டது. மக்கள் தெளிவாக உள்ளார்கள். மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பாரிய தடையாக அமையும்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆட்சி செய்தது.ராஜபக்ஷர்களின் முறையற்ற பொருளாதாரக் கொள்கையை அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். சுட்டிக்காட்டிய குறைகளை அப்;போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருத்திக் கொள்ளவில்லை. மாறாக எங்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கினார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது சகாக்கள் ஜனாதிபதிக்குப் பாரிய தடையாக இருப்பார்கள்.

பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணையுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எம்மிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.ராஜபக்ஷர்களுடன் இனி ஒருபோதும் ஒன்றிணையப. போவதில்லை.அரசியல் ரீதியில் தனித்து செயற்படுவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.