சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் ஸகாத் விநியோகம் குறித்த கலந்துரையாடல்
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் ஸகாத் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத் நிதியத்தின் தலைவர் மௌலவி ஐ எல்.எம்.றஹ்பியின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம்.ஹிபத்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளரும், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம், சொப்டா கெயா நிறுவனத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நஸீர், றியோ மார்க்கட்டிங் தவிசாளர் என்.எம்.றிஸ்மீர், சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், கிராம சேவை உத்தியோகத்தர் எல். நாஸர் உள்ளிட்ட பைதுஸ் ஸகாத் நிதியத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள், மரைக்காயர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை ஸகாத் விநியோகத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதில் இம்முறை ஸகாத் கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை முதல் கட்ட நடவடிக்கையாக முஹல்லா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தெரிவுகளை மேற்கொள்வது எனவும் அடுத்த கட்டங்களாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாகவும் அதனை அடுத்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத் நிதியத்தின் உறுப்பினர்கள் ஊடாகவும் தெரிவுகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டது.
இம்முறை ஸகாத் விநியோதத்தின் போது சுயதொழில், பூர்த்தியாகாத வீடுகளை உரியவர்களின் பங்களிப்புடன் உதவுதல், கல்விக்கு உதவுதல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் வீடற்றோருக்கு சாய்ந்தமருதில் ‘ஸகாத் கிராமம்’ எனும் திட்டத்தினூடாக எதிர்காலத்தில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
ஸகாத் விநியோதத்தின் போது பயனாளிகளை தெரிவு செய்வது தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை