காலி முகத்திடல் போராட்டகாரர்களை கர்ம வினை தொடர்ந்து துரத்துகிறது!  ரோஹித அபேகுணவர்தன சாட்டை

காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்னிலையில்  இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது. மக்களைத் தவறாக வழிநடத்திய  போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர்.

களுத்துறையில் சில நாள்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராவார் என  நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் பல்வேறுபட்ட நபர்கள் இருந்தனர். அங்கு கூடாரங்களை அமைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு பெயரிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் எமது எதிரியாக இருந்தாலும் அவருக்கு ஏதேனும் அனர்த்தம் நடந்தால் அது தொடர்பாக மகிழ்ச்சியடையக் கூடாது.

இந்த பௌத்த தேசத்தில் இயற்கையாக சில சம்பவங்கள் நடப்பது தொடர்பில் கேட்க முடிகின்றது. அங்கு பந்தமேந்தி மந்திரம் ஓதி செயற்பட்ட பூசாரி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அதேபோன்று அங்கிருந்த நூலகத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டார்.

வெசாக்கின் போது கறுப்பு நிறத்தில் வெசாக் கூடு செய்தவர் இப்போது பைத்தியக்காரர்களின் மருத்துவமனையில் உள்ளார்.

இந்த போராட்டத்தில் முக்கியமாக இருந்த ஒருவர் தெஹிவளை பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இன்னுமொருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதேவேளை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர் லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை.

இதேவேளை ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்ற தொழிற்சங்க பிரதானி விபத்தில் காலொன்றை இழந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அதுகோரல கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார். இவை இந்த ஒரு வருடத்துக்குள் நடந்தவை. கர்ம வினையின் பலன்களை இப்போது காணக்கூடியதாக உள்ளது.

இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. களுத்துறை நகரில் 16 வயது சிறுமி  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் பிரதான சந்தேக நபர் போராட்டத்தின் களுத்துறை மாவட்ட ஏற்பாட்டாளர். இவர் இரண்டு திருமணங்களை முடித்தவர். இவர் போராட்டத்தின் பிரதான நபராவார். போராட்டத்தின் உண்மைத் தன்மையும், போராட்டகாரர்களின் சுயரூபத்தையும் மக்கள் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.கர்மவினை தொடரும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.