ஆளுநர்கள் குறித்து தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே! அமைச்சரவை பேச்சாளர் பந்துல திட்டவட்டம் 

ஆளுநர்களின் நியமனம் , பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடைய விடயமல்ல. அவை முழுமையாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவையாகும்.

ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுபவர்களாவர். எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கான முழுமையான உரிமையும் , அதிகாரமும் அவருக்கு மாத்திரமே காணப்படுகிறது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வடமேல் , கிழக்கு , சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு ஆளுநர்கள் பதவி விலகிய பின்னர் அந்த பதவிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களே நியமிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை சாடும் வகையில் , கடந்த சனிக்கிழமை திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹாம்பத் , ‘கிழக்கிலிருந்து ஆளுநராக உங்களை சந்திக்கும் இறுதி நாள் இதுவென்று எண்ணுகின்றேன்.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படக் கூடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இதனை மறுத்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சரவை ஊடக சந்திப்பில் வினவிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.