மாவீரர் மயானத்தை விடுவிக்கக் கோரி முல்லையில் உண்ணாவிரத போராட்டம்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் மயானம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.
15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மூன்று தசாப்த கால கொடூர உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு- அளம்பில் மாவீரர் மயானம் அமைந்துள்ள காணியை தம்மிடம் மீளப் பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி, யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூர்ந்து, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் வசம் காணப்பட்ட தமிழர் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியதையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கில் ஏறக்குறைய 20 ஆயிரத்து 400 தமிழ் போராளிகளின் புதைகுழிகள் அடங்கிய சுமார் 25 மயானங்கள் இராணுவத்தால் அழிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் தகர்க்கப்பட்டன.
அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்கத் தவறினால் திட்டமிட்டவாறு உண்ணாவிரதத்தை தொடரப்போவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை இராணுவத்தின் 23 ஆவது சிங்கப் படையணியினர் தமது முகாமுக்கு அருகில் அமைந்துள்ள அளம்பில் மாவீரர் மயானத்தை இழிவுபடுத்தியுள்ளதாக முத்தையன்கட்டுவில் வசிக்கும் தந்தையொருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
‘எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்கிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள், உணவகம் நடத்துகிறார்கள். எங்கள் பிள்ளைகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்கு அவர்கள் உடனடியாக கல்லறையை விட்டு வெளியேற வேண்டும்.’ என முருகையா ராசையா என்ற தந்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் தமது பிள்ளைகளின் புதைகுழியை பல்வேறு வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை குறித்து முன்னாள் தமிழ் புலி உறுப்பினர் ஒருவரின் தந்தை மற்றும் இரண்டு உறுப்பினர்களின் தாய்மார்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
‘எங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், தீபம் ஏற்றவும் முடியாமல் கடும் மன உளைச்சலில் வாழ்கிறோம்’ என மட்டக்களப்பை சேர்ந்த தாய் தயாளினி தெரிவித்துள்ளார்.
அளம்பில் மாவீரர் மயானம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், புதைக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தும் வகையிலும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொள்வதோடு, தவறினால் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டவாறு நடக்குமென அறிவித்துள்ளனர்.
இறந்தவர்களுக்கு மரியாதை செய்வது தமிழ் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், போரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை போர்வீரர்களாக போற்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யுத்த நினைவு தினத்தை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த சிங்கள இராணுவத்தினரின் வருடாந்த வெற்றி தினத்தை கொண்டாடும் போது, தமது அன்புக்குரியவர்களின் நினைவாக தீபம் ஏற்ற முயலும் தமிழ் மக்களை இலங்கை அரசும் இராணுவத்தினரும் அச்சுறுத்தி வருவதாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேதனையும், கோபமும், விரக்தியும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை