டெங்குத் தாக்கத்தை கட்டுக்குள்கொண்டுவர சுகாதாரப் பிரிவினர்களுக்கு அநுராதா பணிப்பு!
(அபு அலா)
டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும், சுகாதாரத் தரப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு – 3 வைரஸ் பிறழ்வின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றதையடுத்து, இதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –
‘டெங்கு – 3’ வைரஸ் பிறழ்வின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதேவேளை, அதற்கான விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு நாம் வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. இந்த அபாய எச்சரிக்கையிலிருந்து எமது மக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சகல செயற்றிட்டங்களையும், முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவேண்டும். இதனைக் கருத்திற்கொண்டு நாம் அனைவரும் ஒன்றினைந்து டெங்கு – 3 பிறழ்வின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செயற்படுமாறு அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்னாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதளிதரன், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா, கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக, கிழக்கு மாகாண தொற்று நோயியல் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ்.அருள்குமரன், சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை