மண்ணெண்ணெய் உடலில்பட்ட சாரைப்பாம்பு போன்று கலக்கமடைகின்றார் நீதி அமைச்சர்!   அஜித் மான்னப்பெரும  போட்டுத்தாக்கு

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மண்ணெண்ணெய் உடலில் பட்ட சாரை பாம்பு போல் கலக்கமடைகிறார். அவரது செயற்பாடு பிரச்சினைக்குரியதாக  உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிறிதொரு தரப்புடன் டீல் செய்ததால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கப்பலின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகும் பின்னணியில்  4.5 மில்லியன் டொலர் கடன் பெற்று சிங்கப்பூர் நாட்டில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 1486 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 329 மெற்றிக்தொன் நைட்ரிக் அமிலம்,25 மெற்றிக்தொன் ஆசிட் அமிலம்,பிளாஸ்டிக் பரள்கள் 07 நாள்கள் தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கின. இதனால் கடல் வளங்களுக்கும்,கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை பணத்தால் ஒருபோதும் மதிப்பிட முடியாது.

இந்த கப்பல் விபத்தால் 2021.05.20 ஆம் திகதி முதல் 2022.11.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  பொருளாதார நடவடிக்கைகளுக்கு 6.48 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது என என கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை (மீபா)சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்வரும் 10 வருட காலங்களை உள்ளடக்கியதாக மதிப்பிட வேண்டும்.

2020 ஆம் ஆண்டு கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் நட்டஈடு பெற்றுக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மீபா நிறுவனம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும் வழக்கு தாக்கல் செய்வது ஏன் தாதமப்படுத்தப்பட்டது என்பதை சுற்றாடல் துறை தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை தெரிவு குழுவில் விசேட கவனம் செலுத்தினோம்.

கப்பல் விபத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த வகையில் செயற்படுகின்றன. வழக்கு  தாக்கல் செய்து  நட்டஈடு பெற்றுக்கொள்வதை பலமான சக்தி ஒன்று தடுத்துள்ளது.

இலங்கையில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என  கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை,40 துறைசார் நிபுணர்கள் வலியுறுத்திய நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் மாற்று கொள்கைளை செயற்படுத்துகின்றமை பிரச்சினைக்குரியதாக இருந்தது.

கப்பலின் உரிமை நிறுவனம் சிங்கப்பூர் நாட்டில் உள்ளதால் அங்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டார்கள். ஆனால் தேசிய மட்டத்தில் பல தரப்பினர் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக எமது நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்துள்ளார்கள். கப்பல் நிறுவனத்தில் பிரதிநிதிகள் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுகிறார்கள்.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள பின்னணியில் 4.5 மில்லியன்    டொலர்  கடன் பெற்று  ஏன் சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.கப்பலின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து வழக்கு விசாரணையில் முன்னிலையாகும் போது கடன் பெற்று சிங்கபூருக்கு ஏன் செல்ல வேண்டும் என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை தெரிவு குழு ஊடாக அவதானம் செலுத்தினோம்.

இந்த வழக்கு விவகாரத்தில் வாதாடும் தன்மை இலங்கையில் இல்லை என நீதியமைச்சர் விஜயதாஸ குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றதாகும்.1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கப்பல் விவகாரம் தொடர்பில் இலங்கையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. ஆகவே வரலாற்றை நீதியமைச்சர் மீட்டுப்பார்க்க வேண்டும்.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் மண்ணெண்ணெய் உடலில் பட்ட சாரைபாம்பை போல் நீதியமைச்சர் கலக்கமடைகிறார். இவரது செயற்பாடு பிரச்சினைக்குரியதாகவுள்ளது.பல விடயங்கள் தொடர்ந்தும் மறைக்கப்படுகின்றன..

நட்டஈட்டை குறைத்துக் கொள்ள கப்பல் நிறுவனம் பிரித்தானிய நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இலங்கை 6.4 பில்லியன் டொலர் நட்டத்தை பெற்றுக்கொள்ள சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கடல் மார்க்கத்தில் ஏற்படும் விபத்துக்களின் போது நட்டஈட்டு தொகையை வரையறுத்துக் கொள்ளும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தில் சிங்கப்பூர் கைச்சாத்திட்டுள்ளது.ஆகவே இந்த விவகாரத்தில் 6.4 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியது.

இந்த கப்பல் விபத்தால் கடற்கரையோரங்களுக்கு ஏற்பட்ட மாசடைவை தூய்மைப்படுத்துவதற்கு கப்பலின் காப்புறுதி நிறுவனம் 1.6 பில்லியன் டொலர் வழங்கியுள்ளது,2022 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான நிலுவை தொகை வழங்கவில்லை.

நிலுவை தொகை வழங்குவதாக காப்புறுதி குறிப்பிட்டுள்ள நிலையில் அது வழங்கப்படவில்லை. இதன் பின்னணியில் யார் உள்ளார் என்பதை கேள்வி எழுப்பும் உரிமை எமக்கு உண்டு, தெரிவு குழுவில் எழுப்பிய கேள்விகளுக்கு நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை, கலக்கமடைந்தார்.

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல்,நியூ டைமன் கப்பல் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முறையாக செயற்படவில்லை, இவர்களின் செயற்பாடு அதிருப்தியளிக்கிறது.

எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் விவகாரம் தொடர்பில் நான்  நீதியமைச்சரிடம் குறிப்பிட்டேன்.நல்லாட்சி அரசாங்கத்தில் டீல் செய்ததால் அவர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.எமது அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர் என்ற காரணத்தால் அவரிடம் குறிப்பிட்டேன். ஆனால் அதை அவர்  எனக்கு எதிராகத் திருப்பினார்.

இந்த விவகாரத்தில்  இங்கிலாந்து நாட்டில் வாழும் ஒருவர் வட இந்தியாவில் உள்ள பஹாமாஸ் தீவு வங்கியில்  250 மில்லியன் டொலர் வைப்பிட்டு அதனை இலஞ்சமாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டேன்.

இந்த விடயத்தின் உண்மை தன்மையை பகிரங்கப்படுத்துவதை விடுத்து பிறரை குற்றஞ்சாட்டிக் கொண்டு திரிகிறார். இலங்கையின் நீதியமைச்சரின் நிலை இவ்வாறானதாக உள்ளது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.