275,000 மெற்றிக்தொன் எரிபொருள் கசிந்திருந்தால் போர்ள் கப்பலால் பாரியவிளைவுகள் ஏற்பட்டிருக்கும்! நாலக கொடஹேவா கருத்து
தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் வைத்திருப்பது அவதானத்துக்குரியது. தீ விபத்தால் ஏற்பட்ட செலவுகளை வைப்பிலிட்டதும் கப்பலை வெளியேற்றுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் சிறந்தது.
துரதிஷ்டவசமாக கப்பலில் சேமிக்கப்பட்டிருந்த 275,000 மெற்றிக் தொன் எரிபொருள் கடலில் கலந்திருந்தால் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றிருக்கும் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்,நியூ டைமன் கப்பல் ஆகிய இரு கப்பல் விவகாரத்தையும் நீதியமைச்சர் தனக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொள்கிறார்.2020.07.15 ஆம் திகதி மொரிசியஸ் நாட்டின் கடற்பரப்பில் வகஷியோ என்ற சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கடலுடன் கலந்து,பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
இவ்வாறான பின்னணியில் 2020 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ டைமன் கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது.இதன் போது இந்த கப்பலில் 2 லட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவுக்கு பயணத்தை மேற்கொண்ட நிலையில் நியூ டைமன் கப்பல் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளானது.அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய கடற்படையின் ஒத்துழைப்புடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார். இந்திய கடற்படையின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கடலலை சீற்றத்தால் கப்பல் நாட்டின் கரையோரத்தை நோக்கி நகரும் தன்மையில் இருந்தது என கடற்படை குறிப்பிட்டது.எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் தீ எந்த நேரத்திலும் மீண்டும் பரவலடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கப்பலை நாட்டின் கரையோரத்துக்கு கொண்டு வந்து துரதிஷ்டவசமாக மீண்டும் கப்பலில் தீ பரவி, 2 லட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கடலில் கலந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
பாரதூரமான விளைவுகளை தோற்றுவிக்காமல் ஏற்பட்ட செலவு தொகையை முழுமையாக வைப்பிலிட்டதும், கப்பலை வெளியேற்றுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.இதனை நீதியமைச்சர் நன்கு அறிவார்.ஆனால் நீதியமைச்சர் தற்போது மாறுபட்ட கருத்துக்களை குறிப்பிடுகின்றமை கவலைக்குரியது.
விபத்துக்கு உள்ளான கப்பலை நாட்டின் கடற் பரப்பில் தொடர்ந்து வைத்திருப்பது அவதானத்துக்குரியது ஆகவே கப்பலை வெளியேற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதில் எவ்வித தவறும் இல்லை.அப்போதைய நிலையில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சிறந்தது.வெளிவிவகாரத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் விடுத்த அறிவிப்புடன் நீதியமைச்சர் என்னைத் தொடர்புப்படுத்தியுள்ளார்.
முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே விடுத்த அறிவிப்புக்கு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன,அதாவது தற்போதைய பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் அதனை விடுத்து குறுகிய அரசியல் நோக்கத்துக்காக என்னை தொடர்புப்படுத்தி நீதியமைச்சர் என் மீது சேறு பூசுஎவது முறையற்றது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை