கல்முனை வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம்!

நூருல் ஹூதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வைபவரீதியாக இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கோட்டமட்ட போட்டிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். தனதுரையில் எதிர்வரும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியின் போது, கல்முனை வலயம் முதலாம் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தும் என தனக்கு நம்பிக்கையிருப்பதாக மாணவர்களுக்கு ஊக்கமளித்து உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர், விளையாட்டினதும் கல்முனை கோட்டத்தினதும் பல்வேறு சிறப்பியல்வுகள் தொடர்பில் உரையாற்றினார்.

கல்முனை கோட்டத்தில் உள்ள கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் உள்ள 17 பாடசாலை மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதுடன் 125 போட்டி நிகழ்சிகள் நடைபெற்றன. இரண்டு தினங்களுக்கு தொடர்சியாக நடைபெறும் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு கல்விமான்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரமுகர்களின் பங்கெடுப்புடன் பிரமாண்டமாக நடைபெற்றது. இதன்போது பரிசளிப்பும், பாடசாலை மாணவர்களின் கண்கவர் அலங்கார அணிவகுப்புக்களும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஆரம்ப நிகழ்வின் போது விளையாட்டுப் போட்டிக் குழுவின் செயலாளரும் உடற்கல்வி ஆசிரியருமான எம்.ஆர்.ஏ.கியாஸ் உட்பட பாடசாலைகளின் பிரதிநிதிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.