நலன்புரிக் கொடுப்பனவுகள் திட்டம்: பெருந்தோட்ட மக்களுக்கு சந்தேகம்!  இராதாகிருஸ்ணன் வருத்தம்

17 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற நியதி காணப்படும் போது மலையக மக்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே இந்த விடயத்தில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கான சிறந்த நலன்புரி கொடுப்பனவுத் திட்டமாக அஷ்வசும்  புதிய செயற்திட்டம் காணப்படுகிறது.

பல லட்சம் பேருக்கு இந்தத்  திட்டத்தின் ஊடாக நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  6 ஆயிரம் ரூபா குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே  அரச நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டன. இந்த தொகை தற்போது 17,772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் 46 சதவீத அத்தியாவசிய பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மாத வருமானம் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை ஆகியவற்றை மதிப்பிட்டு ஒரு குடும்பத்தின் நிலையை மதிப்பிட முடியும்.

மாதம் 17 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் பெறும் தரப்பினருக்கு அல்லது குடும்பத்துக்கு இந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வரையறை காணப்படுவதால் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நலன்புரிக் கொடுப்பனவு கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஏற்கனவே வழங்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவிலும் மலையக மக்களில் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். குடும்ப அடிப்படையில் மலையக மக்களுக்கு இந்த நிவாரணம் கிடைக்குமா என்பதை நிதியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.

விவசாயத்துறை வீழ்ச்சி,அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் ஆகிய காரணிகளால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நலன்புரித் திட்டத்துக்கு உலக வங்கி உதவி வழங்குகிறது. ஆகவே இந்த நிதி தொகை நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

நுவரெலியா வைத்தியசாலையில் அண்மையில் 34 பேருக்கு கண் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.இவர்களில் 10 பேருக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம்  செலுத்த வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.