பெரும் துயர் நிகழ்ந்த தினத்தில் தொல்லியல் ஆக்கிரமிப்புக்கு நாள் குறிப்பது இனகுரோதம்! சந்திரகுமார் காட்டம்

கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் (உருத்திரபுரதீஸ்வரர்) ஆலயத்தில் மே – 18 தொல்பொருட்திணைக்களம் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிப்பதானது இனகுரோதத்தின் உச்சமாகவே நோக்கப்படுகிறது.

தமிழ் மக்களுக்கு பெரும் துயர் நிகழ்ந்த ஒரு தினத்தில் தொல்லியல் திணைக்களமும் தனது நடவடிக்கைக்கு  நாள் குறித்திருப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஆலயத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது சமூக நெருக்கடியையே உண்டாக்கும். நாட்டில் அமைதியையும் சமூக ஒருங்கிணைவையும்  ஏற்படுத்துவதற்குப் பதிலாக அவற்றைச் சிதைக்கும் விதமாக அரசாங்கமே நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதனால் நாட்டுக்கே பாதிப்புகள் ஏற்படும்.

அத்துடன் இந்த நடவடிக்கை யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கொள்ளும் 18.05.2023 அன்று  நடத்தப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட ரீதியில் சமூக நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது. நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்கி, பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு, பொருளாதார ரீதியில் நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் தாங்கள், இது தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே வடக்குக் கிழக்குப் பகுதிகளில்  சிலைகளை அமைப்பது, விகாரைகளைக் கட்டுவது என்றவிதமாகத் தொல்பொருட்திணைக்களத்தால் பொருத்தமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தொல்பொருட் திணைக்களம் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ், முஸ்லிம் மக்கள் கலவரமடையும் நிலை உருவாகியுள்ளது.

இன்று நாட்டுக்குத் தேவையாக இருப்பது அமைதியும் அரசியற் தீர்வும் பொருளாதார மீட்சியுமே. அதற்குரிய துறைகள் சிறப்பாக, துரிதமாகச் செயற்பட வேண்டும். பிரச்சினைகளை உருவாக்கி, சமூகச் சிதைவை உண்டாக்கும் திணைக்கமல்ல.  இந்த நாட்டில் மாற்றங்களைக் காண விளையும் விதமாக நாம் செயற்படுவோம். அதற்கான வழிவகைளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்  என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.