சட்ட விரோத மரக்கடத்தலின்போது துப்பாக்கிச் சூடு: சாரதி தப்பியோட்டம் ; பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்!

சட்ட விரோத மரக்கடத்தலோடு தொடர்புடைய சந்தேக நபரான வாகன சாரதியொருவர் தப்பியோடியதோடு, அவ்வேளை ஏற்பட்ட வாகன மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவமொன்று புதன்கிழமை அதிகாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

பறயனாளங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர்கள் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் சட்ட விரோதமாக மரக்கடத்தலில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கும் முயன்றுள்ளனர்.

அவ்வேளை சந்தேகத்துக்கிடமான கெப் ரக வாகனமொன்றை நிறுத்துவதற்காக வழிமறித்துள்ளனர்.

எனினும், குறித்த வாகனம் நிறுத்தப்படாமல், விஷேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியதையடுத்து, வாகனம் முன்செல்ல விளைந்தபோது, குறித்த வாகனத்தை நிறுத்துவதற்காக அதன் முன்சக்கரத்தில்  பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போது வாகனத்தின் சாரதி கெப் ஓடிக்கொண்டிருக்கும்போதே கீழே குதித்து தப்பிச் சென்றுள்ளார்.

அதனையடுத்து, குறித்த வாகனம் மற்றும் அதனுள் இருந்த ஏழு பெரிய முதிரை மரக்குற்றிகளும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு, ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன மோதலில் பறயனாளங்குளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்திரதிலக என்பவரே காயமடைந்துள்ளார்.

அதனையடுத்து, காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு,  காயங்கள் பாரதூரமானதாக இல்லாத நிலையில் உரிய சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பறயனாளங்குளம்  விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.