ஜனாதிபதி ரணில் தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல்!
முப்பதாண்டுகளில் உயிரிழந்த தேசத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் படைவீரர் சேவைகள் அதிகாரசபையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய போர் வீரர் தின நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் , தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, இந்த ஆண்டு பெருமைமிக்க வகையில் தேசத்தின் போர்வீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காக்கத் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் மாவீரர்களை நினைவுகூரும் வகையில், அவர்களைப் பாராட்டும் வகையில் விசேட போர்ப்பறை இசையுடன் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் தேசிய போர்வீரர் நினைவேந்தலில் பங்குபற்றவுள்ளனர். இறந்த போர்வீரர்களுக்கு நினைவு ஆடைகள் வழங்கப்படுவதுடன், பௌத்த மற்றும் பிற மத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
பின்னர் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும். இங்கு முப்படை அணிவகுப்பு நடத்தப்பட்டு இராணுவ வீரர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் உரைகள் எவையும் இடம்பெறப் போவதில்லை. முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை