இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கமையவே கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தல்! வஜிர அபேவர்த்தன இப்படிக் கருத்து

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும். அதனால் இராணுவத்துக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அரசாங்கம் என்றவகையில் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். மிகவும் மோசமான முறையில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை சீர்செய்து, அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அதனால் ஜனாதிபதியின் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அத்துடன் கடந்த சில தினங்களாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இரணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையவே இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கம் என்றவகையில் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும். தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அது தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் வைத்திருப்பவர்களை கைதுசெய்யலாம்.

ஆயுதம் ஏந்தாத பயங்கரவாதிகளை எப்படி கைதுசெய்வது என்பது தொடர்பாகப் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்காகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

அதேநேரம் உலகில் தொழிநுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அந்த தொழிநுட்பத்துக்கு ஏற்ற புதிய கண்டுபிடிப்புக்கள் செய்யப்பட வேண்டும்.

எனவே நாட்டின் பாதுகாப்புக்கு புதிய விதிகள் மிகவும் முக்கியம். அதனால் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் மனதில் ஆயுதம் ஏந்தியவர்களை அடையாளம் காணத் தேவையான நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படும்போது, அதனை அழிக்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் இந்த நாட்டில் செயற்படுகின்றன.

எனவே அவர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் சட்ட அமைப்பை தயாரிப்பது எமது கடமை. அதனை நாட்டை நேசிக்கின்ற அனைவரும் ஒன்றுபட்டு ஏற்படுத்துவதற்கு முன்வரவேண்டும்.  – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.